பிஞ்சு மனம் நஞ்சானதே...!

சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய இரண்டு கொலைகள்.

ஒன்று: சென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம்.
அடுத்தது: மதுரை, திருப்பாலையில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் மனைவியே, கணவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம்.
இரண்டுமே திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல என்று தெரியவருகிறது
முதலாவதாக; சென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம். கடந்த வியாழக்கிழமை பாரிமுனையில் உள்ள ஆர்மேனியன் தெருவில் இருக்கும் செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்த கொலை நிகழ்ந்தது. அந்த பள்ளியின் ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரிடம் படிக்கும் 9-வது வகுப்பு மாணவனே இந்த கொடூரத்தை செய்துவிட்டான்.
அந்த பள்ளி மாணவன் தற்போது கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது பிஞ்சு மனது நஞ்சாகி கொலை செய்யும் அளவுக்கு அவன் எவ்வாறு தூண்டப்பட்டான் என்பது அவனது வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.

அந்த மாணவன் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு தற்போது புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அதே சீர்திருத்த இல்ல வளாகத்தில் செயல்படும் சீர்திருத்த நீதிமன்றம் அவன் மீதான வழக்கை விசாரிக்க உள்ளது.
பொதுவாக அறியாத வயதில் புரியாமல், தெரியாமல் சிறுவர்- சிறுமிகள் குற்றங்களில் ஈடுபட்டு இந்த இல்லத்தில் அடைக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் விரும்பிய நேரத்தில் இவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டவுடன் அவன் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 3 பெண் அதிகாரிகள் அவனிடம் அன்பாக பேசினார்கள். அவனது மனம்கோணாத வகையில் நடந்த சம்பவம் பற்றி அவனிடம் அன்பாக பேசி கேட்டறிந்தார்கள். முதலில் இல்லத்துக்கு சென்றவுடன் மாணவன் வருத்தத்தோடும், மனஇறுக்கத்தோடும் காணப்பட்டான். பெண் அதிகாரிகளின் அரவணைப்பான பேச்சால், இயல்பான அவன் நடந்த சம்பவம் பற்றி விளக்கி கூறியுள்ளான்.
கொலை செய்தது ஏன்? எனக்கேட்டதற்கு, ''ஆசிரியை உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர்.அதே நேரத்தில் கண்டிப்பாக பேசுவார். முதலில் அவரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. வீட்டில் நான் ஒரே பிள்ளை. அப்பா-அம்மா, என்னை செல்லமாக வளர்த்தார்கள்.
வீட்டில் எனக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கும். நான் அந்த அறையில் இருந்துதான் படிப்பேன், படுத்து தூங்குவேன். கொலை, வெட்டுக்குத்து, வில்லனை கதாநாயகன் அடித்து நொறுக்கும் சண்டைக்காட்சிகள் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில படங்களையே நான் விரும்பி பார்த்தேன். கடைசியாக `அக்கினி பத்' என்ற இந்தி படத்தை நான் பார்த்தேன். அதில், கதாநாயகன், வில்லனை கத்தியால் நெற்றியில் குத்துவான். அந்த காட்சி எனது மனதில் ஆழமாக பதிவானது.
நான் இந்தி பாடத்தை சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி என்னை கண்டிப்பார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 3 முறை எனது `ரிப்போர்ட்' கார்டில் என்னைப்பற்றி தவறாக எழுதிவிட்டார். என்னிடம் பாசத்தை கொட்டும் எனது தந்தைகூட இதை பார்த்துவிட்டு என்மீது கோபப்பட ஆரம்பித்தார். எனக்கு தினமும் செலவுக்காக நான் கேட்கும் பணத்தை என் அப்பா கொடுப்பார். ரிப்போர்ட் கார்டில் ஆசிரியை எழுதியதை பார்த்தவுடன் எனக்கு செலவுக்கு பணம் கொடுப்பதை இனிமேல் தரமாட்டேன் என்று எனது தந்தை கண்டிப்பாக கூறினார்.
இது, மனதுக்கு ஒரு கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆசிரியை மீது கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த புதன்கிழமை அன்று இந்தி பாடம் சரியாக படிக்காத என்னைப் போன்ற 7 மாணவர்களை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு வகுப்புக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி வரச்சொன்னார். அப்போது அவர் என்னை திட்டினார். இனி ஒழுங்காக படிக்காவிட்டால், பெயிலாகி விடுவாய் என்று சொன்னார். இது, எனது மனதில் ஏற்கனவே இருந்த கோபத்தோடு பயத்தையும் உண்டாக்கியது.
ஆசிரியை இவ்வாறு சொன்னதை பார்த்து, எனது சகமாணவர்கள் என்னை கிண்டல் செய்தனர். இது, எனக்கு அவமானத்தையும், மேலும் கோபத்தையும் தூண்டியது. அப்போதுதான் இந்தி படத்தில் வரும் காட்சியைப்போல, ஆசிரியையை கத்தியால் குத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஆசிரியை செத்துப்போவார். போலீசார் பிடிப்பார்கள். நம்மை இப்படி இல்லத்தில் அடைப்பார்கள் என்று எதுவும் எனக்கு தெரியாது. இப்போது வருத்தமாக உள்ளது," என்று கூறியுள்ளான்.
அந்த மாணவனுக்கு கவுன்சலிங் கொடுத்து இயல்பாக இருக்க வைத்துள்ளனர் போலீசார். நேற்று காலையிலும், நேற்று முன்தினம் காலையிலும் அவனுக்கு ஒரு மணி நேரம் யோகா சொல்லிக்கொடுக்கப்பட்டது. மற்ற மாணவர்களோடு விளையாடவும் அனுமதிக்கப்பட்டான்.
டிவி பார்க்கவும், விளையாடவும் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவன் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் தெரிந்த 2 ஆசிரியைகள் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். அந்த மாணவனுக்கு புதிய சீருடை தைத்து வழங்கப்பட்டது.
ஒரு குற்றவாளி என அந்த மாணவனுக்கு நினைப்பு வராத அளவுக்கு பார்த்துக் கொள்கின்றனர் அந்த இல்லத்தில். அவனுக்கு என்ன தண்டனை என்பதை சீர்திருத்த நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.
மற்றொன்று :
வேலியே பயிரை மேய எத்தனித்த சம்பவம்
மதுரை, திருப்பாலையில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் மனைவியே, கணவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றார்.

இந்த சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து உஷாராணியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கொலையுண்ட ஜோதிபாசு என்ற வீரண்ணன் தனது மகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி உஷாராணி மகளின் மானத்தை காப்பதற்காகவே வீரணனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றார். இதனை உறுதிப்படுத்திக் கொள்ள உஷாராணியின் 2-வது மகள் பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
அவரது உடலில் பல இடங்களில் கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஜோதிபாசு தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றதும், அதிலிருந்து மகளை காப்பாற்றவே உஷாராணி தனது கணவரை கொலை செய்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்திய தண்டனை சட்டம் 100, 120 பிரிவுகளின் படி பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக கொலை செய்தால் அது சட்டப்படி குற்றமாகாது.
எனவே அதன்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. தங்கவேலு, இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் உஷாராணியை விடுதலை செய்தனர்.
கொலை வழக்குகளில் இதுபோல விடுவிக்கப்படுவது மிக அரிய நிகழ்வாகும். போலீசாருக்கு ஜோதிபாசு பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதாலும், பல காவல் நிலையங்களின் குற்றவாளிகள் பட்டியலில் அவர் இருப்பதாலும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
ஏற்கெனவே இவர் மனைவி மற்றும் மகள்களை துன்புறுத்துவதாக போலீசில் புகார் இருந்தது. இந்தப் புகார் குறித்து விசாரித்த போலீசாரிடம், இனி மனைவியை அடிக்கவே மாட்டேன் என உறுதி அளித்துவிட்டுப் போனாராம். அடுத்த 15 தினங்களில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கேவலத்தை அரங்கேற்றியுள்ளார். அதன் விளைவாகவே உஷா ராணி அடித்துக் கொன்றுவிட்டார்.
இந்த மாதிரி வழக்குகளில் போலீசாருக்கு உண்மை முழுமையாகத் தெரிந்தால், அவர்களே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் கூறுகையில், "பெண்களின் தற்காப்புக்காக அரசியல் சட்டம் அளிக்கும் உரிமை இது. குற்றத்துக்கான முகாந்திரம் உறுதியாகத் தெரிந்ததால் இந்த முடிவை மேற்கொண்டோம்," என்றார்